Bicycle traveler

விகாஸ் எதிராஜ் – வயது 24, கட்டிடப் பொறியாளர்

அருண் ராகேஷ் – வயது 27 மென்பொறியாளர்

விகாஸ் எதிராஜ் சென்னையிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மிதிவண்டியில் தனது பயணத்தை தொடர்கிறார். இதுபற்றிய ஒரு பதிவை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பத்தியாக அவரது இணையப்பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

விகாஸ் தன்னுடைய பயணத்தை தினமும் யூடியூப் & இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்கிறார்.

அருண் ராகேஷ்ம் சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மிதிவண்டியில் பயணப்படுபவர், தன்னைப்போன்று வேறுயாரும் இப்படி பயணம் மேற்கொண்டுள்ளார்களா என்ற தேடலில் விகாஸ் பதிவுகளைப் பார்த்து தொடர்புகொண்டு தாய்லாந்தில் இருவரும் சந்தித்து தங்களது மிதிவண்டி பயணத்தை தொடர்ந்தனர்.

இருவரும் ஆஸ்திரேலியா வரை போவதென்ற தற்போதைய இலக்கில் சிங்கப்பூரில் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு இன்று திரும்புகின்றனர்.

விகாஸ் எதிராஜ்-ன் ஆஸ்திரேலியா பயணம் விரைவில் தொடரும்.

அருண் ராகேஷ் தனது மிதிவண்டியில் வேறு நாடுகளை நோக்கி பயணப்படப் போகிறார்.

இருவருக்குமே மிதிவண்டிப் பயணமென்பது கனவல்ல, இலக்குமல்ல. ஏதோ ஒரு உந்துதலில் இலக்கின்றி விளம்பரமில்லாத இந்தப் பயணத்தை யாரையும் நம்பாமல் தொடர்ந்துள்ளனர்.

இவர்களுடனானா விரிவான உரையாடலை எழுத்து வடிவிலும், ஒளிப்பதிவாகவும் கூடிய விரைவில் பதிவுசெய்கிறேன்.

இவர்கள் இருவரையும் சிங்கப்பூரில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் Jeya Kumar

#பாண்டித்துரை

யமுனா வீடு – 13

PC: ஓவியர் துரையெழிலன்

யமுனாவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

யமுனாவை மதுபானக்கூடத்தில் நடமானமாடக்கூடியவளாகவோ,
மெக்டொனால் மேசையை சுத்தம் செய்பவளாகவோ,
முஸ்தபாவில் காசாளராகவோ,
செல் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பக்கூடியவளாகவோ,
சக அலுவலகப் பணியாளர்களில் ஒருவராகவோ,
கவிதைகள் படைக்கும் நிகழ்வொன்றிலோ பார்த்திருக்கலாம்…

யமுனா நம்மை நோக்கி சினேகமாகப் புன்னகைத்திருப்பாள்.
கவனமாக ஒதுக்கிக் கடந்து சென்ற ஒருவனாக நானோ நீங்களோ இருந்திருப்போம்..
அந்தப் புன்னகை சக மனிதனின் புன்னகை
அந்தப் புன்னகையில் மனிதனுக்கான அன்பே இருந்திருக்கும்

யமுனா தவிர்க்கப்பட வேண்டியவளல்லள்
யமுனா நேசிப்பினை யாசிப்பவளல்லள்

யமுனாவின் புன்னகையை அந்தத் தருணத்தில் புன்னகையால் எதிர்கொள்ளவே நினைத்திருப்பாள்

யமுனாவிற்காக புன்னகைப்பது அவ்வளவு ஒன்றும் கீழ்மையானதல்ல

யமுனாவை நாளை ஒரு எம்ஆர்டி பயணத்தில் நான் சந்திக்கலாம்

என்னுடைய முகம்நோக்கி வரும் அவளின் புன்னகையைக் கண்கள் கொண்டு எதிர்கொள்வேன்.

நீ நான் அவள் யமுனா

வேண்டியவளல்லள்
யாசிப்பவளல்லள்
கீழ்மையானதல்ல…

#பாண்டித்துரை

யமுனா வீடு – 12

சித்ராவிடமிருந்து நட்பழைப்பு
சின்னகுயில் சித்ராவா என்றேன்
இல்லை வெறும் சித்ரா என்றாள்
வெறும் சித்ராவாக யாருமே
இருக்க முடியாதே
ஏதாவது ஒரு சித்ராவாக நீ இருக்கக்கூடுமென்றேன் …
முன்பொருநாள்
நட்டு, போல்டுகளைக் கடையும்
நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் பணிபுரிந்த சித்ரா
அப்படி என்ன சிறப்பு
இந்தத் சித்ராவினுள்
இருக்கக்கூடுமென்று
யோசிக்கத் தொடங்கினாள்.